ஆலந்தூரில் “அல் அகீதத்துல் ஸஹீஹா” பாட வகுப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு,

ஆலந்தூரில் உள்ள மஸ்ஜிது அஹ்லே ஹதீஸில் ஷேக் இப்னு பாஜ் அவர்களின் புத்தகமான “அல் அகீதத்துல் ஸஹீஹா” வின் மேல் வகுப்புகள் நடை பெற இருக்கின்றது. முதலில் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் நாடாமல் எவருக்கும் இந்த தீனைப் பற்றிய அறிவு கிட்டுவதில்லை. அல்லாஹ் நாடியவாறே ஒருவருக்கு இஸ்லாத்தின் அறிவு கிட்டுகின்றது. அந்த அறிஞரை நாம் மதிப்புடன் அணுக கற்றுக் கொள்ள வேண்டும். அவர் வஹ்ஹாபி, இவர் சூஃபீ, அவர் ஸலாஃபீ, என்றெல்லாம் வரையறைகள் போட்டு, அடையாளங்கள் இட்டு, அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அந்தஸ்த்தை சிறுமைப் படுத்த விழையக் கூடாது. இன்னும் ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் கிட்டத்தட்ட 150 இஸ்லாமிய அறிஞர்களிடம் பாடம் பயின்றார்கள். அவர்களில் ஒரு சூஃபீ அறிஞரும் அடக்கம். இமாம் அபூ ஹனீஃபா, நான் சூஃபீ அறிஞரிடம் எல்லாம் பாடம் பயில மாட்டேன் என்று தன்னை விலக்கிக் கொண்டாரா? அல்லவே? அறிவெனும் ஊற்று எங்கிருந்தாலும் இஸ்லாமிய அறிவைத் தேடும் ஒரு மாணாக்கன், அதனை அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அது ஆதாரபூர்வமானதா என்று பார்த்தால் மட்டும் போதுமானது, அந்த ஆசிரியரின் அகீதாவை எடை போட்டுப் பார்க்க விழையக் கூடாது. மேலும், அறிவு கிட்டிய பின் நாம் அதனை எவ்வாறு உபயோகப் படுத்துகின்றோம் என்பதே முக்கியமாகும். இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் சூஃபீ அறிஞரிடம் பாடம் கற்றதால் சூஃபீ ஆகிவிடவில்லை. அந்த அறிவை தேவைப் பட்ட இடத்தில் உபயோகப் படுத்தினார். அது போலவே நாமும் செயல் பட வேண்டும். ஃகைர். விடையம் இதுதான். இந்த பாடத்தை பயில, ஆலந்தூர் வரை செல்ல வசதியிருப்பின் இன்ஷா அல்லாஹ் பாடத்தை கற்கவும். நீங்கள் தப்லீக் ஜமா’அத்தாக இருந்தாலும் சரி அல்லது ஸலஃபீ ஜமா’அத்தாக இருந்தாலும் சரி. பாடத்தை பயிலுங்கள். அதன் பின் அந்த அறிவை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நமக்கு நேர்வழியில் நிலை பெற உதவிடுவானாக. ஆமீன். இந்த பாடத்தை பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் அல்லது கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். வஸ்ஸலாம்.

“அப்பா, ஆமீன் என்று கூறுங்கள்”

ரியாதில் உள்ள ஒரு உலெமா தெரிவித்தது:

ஒரு தடவை ரியாதில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருநதோம். அப்பொழுது, ஒரு அறையில், ஒரு வயதான மனிதரும் அவரின் 40 வயது மகளும் இருந்தனர். அவரின் மகளுக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவளுக்கென வந்த ஒவ்வொரு வரனையும் அவ்ளின் தந்தை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். அந்த உலெமா கூறினார், ” அந்த மனிதர் மிகப் பேராசை கொண்டவராக இருந்தார். உலகத்திம் மீது தீராத மோகம் கொண்டவராக இருந்த்தார். ஆனால் அவரின் உலக ஆசை அவருக்கு பயனளிக்க வில்லை. அவரிடம் அளவற்ற செல்வமும், கார்களும், நிலங்களும் இருந்தன. எனவே அவரின் மகளை கல்யாணம் செய்ய முன் வருபவர் செல்வத்தின் அதிபதியாகவும், கணக்கு வழக்கற்ற அளவில் செல்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நிபந்தனையாக இருந்தது. எந்த ஒரு வரன் வந்தாலும் அவனிடத்தில் முதலில் அவனின் சம்பளத்தைப் பற்றியும், அவனிடம் இருக்கும் வாகன எண்ணிக்கையைப் பற்றியும், சொந்தமாய் எத்தனை பெரிய வீடு உள்ளது என்பதுவுமே கேள்வியாய் இருந்தது. என்வே நல்ல்தொரு முஸ்லிமாய் வாழும் எந்த இளைஞனுக்கும் வாய்ப்பு கிட்டாமல் தோல்வியிலேயே முடிந்தது. இப்படியே காலங்கள் செல்ல செல்ல அவரின் மகளுக்கு தீராத ஓர் வியாதி வந்து அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். நாங்கள் அவளைக் காணும் வேளையில் அவள் மலக்குல் மௌத்தைக் காணும் நெருங்கிய தூரத்தில் இருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அவள் அல்லாஹ்வை, வல்ல நாயனை, நீதியின் அதிபதியை காணப் போகின்ற ஏற்பாடுகளில் இருந்தாள்.”

சில வினாடிகளுக்கு பிறகு அவள் தன் தந்தையை அழைத்தாள்,” அப்பா…அருகில் வாருங்கள்!”

அவளின் தந்தை இப்போது அவளின் அருகில் இருந்தார்.

அவள்: “அப்பா, ஆமீன் என்று கூறுங்கள்”

அப்பா: ” ஆமீன்”

அவள்: “அப்பா, மீண்டும் ஆமீன் என்று கூறுங்கள்”

அப்பா: “ஆமீன்”

அவள்: “மூன்று தடவை ஆமீன் என்று கூறுங்கள் அப்பா…”

அதன் பின் கூறினாள், ” எப்படி நீங்கள் எனக்கு திருமண வாழ்வை எட்டா கனியாக்கி அதன் இன்பத்தை எனக்கு தடை செய்தீர்களோ அது போல எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தை தடை செய்யட்டும்”

(அல்லாஹ்வின் மீது ஆணையாக, இது உண்மையில் அவ்விடத்தில் இருந்து அச் சம்பவ‌த்தை நேரில் கண்ட ஒரு ஷேக் / உலெமா கூறியதே இது)

40 வருடங்களாக அவள் தன் தந்தைக்கு அடி பணிந்து அவரின் வீட்டிலேயே, அவரின் சொல் தட்டாமல் வாழ்ந்ததற்கு அவளின் தந்தை யோசித்திருக்க வேண்டாமா? காலம் கடந்த ஞானோதயம் வந்து ஒன்றும் பிரயோஜனமில்லை.

:மூலம்:

அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –2

பகுதி ஒன்று

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த் பகுதியில் அரபி எழுத்துக்களின் உச்சரிப்பை பழகுவோம். உச்சரிப்பு என்றதும் இது நமக்கு தெரிந்தது தானே என்று இருந்து விடாதீர்கள். அரபியில் உள்ள எழுத்துக்களுக்கும் நம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கும் தொலைதூர தொடர்பே உள்ளது. நாம் நினைத்துக் கொண்டு உள்ளது போல ஒரே மாதிரி உச்சரிக்கப் படுவதில்லை அவை. இன்னும் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி அடையாளங்கள் உண்டு. எனவே அரபியை அதன் வழியிலேயேதான் கற்க வேண்டும். தமிழ் போலல்ல.

இன்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்: குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். அலீஃப் லாம் மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலீஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும். மீம் என்பது ஒரு எழுத்தாகும்.” (ஆதாரம்: திர்மிதி)

எனவே ஒவ்வொரு எழுத்தையும் சரியான விதத்தில் உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரித்தால் மட்டுமே முஹம்மது நபி (ஸல்) சொல்லுகின்ற வெகுமதிகளை அல்லாஹ்விடம் கோர முடியும். இன்ஷா அல்லாஹ். இனி, ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும் விதத்தை காண்போம்.

மக்ரஜ்

அரபியில் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பின் பிறப்பிடத்தை குறிக்க மக்ரஜ் (Makhraj) என்னும் சொல்லை உபயோகிப்பார்கள். மக்ரஜ் என்னும் சொல்லின் மூலச்சொல், கரஜ (Kha-Ra-Ja) அல்லது யக்ருஜு(Ya-Kh-Ru-Ju) ஆகும். கரஜ அல்லது யக்ருஜு என்றால், “வெளியில் செல்வது” என்பது பொருளாகும். இங்கு அதன் பொருளானது, உச்சரிப்பு வெளிக்கிளம்பும் விதம் எனக் கொள்ளலாம்.

உலெமாக்களின் கூற்று:

மக்ரஜ் என்றால், ஒரு எழுத்தின் உச்சரிப்பு பிறக்கும் இடம், அல்லது அந்த எழுத்தின் ஒலி உருவாகும் இடம். தஜ்வீத் உலெமாக்கள் இதனை அல்‍=மகாரிஜ் என குறிப்பிடுகின்றார்கள். அல்=மகாரிஜ் என்பது, மக்ரஜ் என்னும் சொல்லின் பன்மையாகும்.

மகாரிஜ் மற்றும் ஸிஃபாத்தின் வித்தியாசங்கள்:

ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பும் வேறு விதமானாலும், சில எழுத்துக்களின் ஒலி ஒரே இடத்தில் இருந்து வெளியாவதும் உண்டு. உதாரணத்திற்கு “பா” மற்றும் “மீம்”, இரண்டு எழுத்துக்களின் உச்சரிப்பும் உதடுகளிலிருந்து உருவாகின்றன. ஆனால் உச்சரிக்கும் விதம் வேறானதாகும். இவ்வாறு ஒரே இடத்திலிருந்து உருவானாலும் அதன் உச்சரிக்கும் விதம், அவ்வெழுத்தின் குணம் ஆகியன மாறுபடும். ஒவ்வொரு எழுத்தின் இயல்புக் குணத்தை குறிக்கும் சொல்லே ஸிஃபா என‌ப்படும்.ஸிஃபா என்றால் ‘அரபி எழுத்தின் இயல்புக்குணம்’ என்று பொருள். என்வே ஒரே மக்ரஜைக் கொண்ட எழுத்துக்களை வேறுபடுத்த ஸிஃபா (அஸ்ஸிஃபாத்‍ பன்மை) உபயோகப் படுகின்றது.

அரபி எழுத்துக்களின் ஒலி:

அடிப்படையில் அரபியில் 28 வகையான ஒலிகள் உள்ளன. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு விதமான ஒலி. ஆனால், சில தஜ்வீத் உலெமாக்கள் “அலிஃப்” என்னும் எழுத்தும் “ஹம்ஜா” என்னும் எழுத்தும் ஒரே வகையான ஒலியைக் கொண்டவையே என்று வாதிடுகின்றனர். அவ்வாறு நோக்கின், 27 வகையான ஒலிகளே அரபியில் உள்ளன.

இனி மக்ரஜைப் பற்றி விரிவாக காண்போம்.

மக்ரஜின் எண்ணிக்கை:

அல்லாமா அல் இமாம் ஷேக் உல் குர்ரா அல் இமாம் அல் ஜஜரி (புகழ் பெற்ற காரி){Al Imaam Shaykhul Qurraa Al Jazari} தன்னுடைய “முகத்திமதுல் இமாமல் ஜஜரி” என்னும் புத்தகத்தில் 17 வகையான மக்ரஜ் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 28 வகை எழுத்துக்கள் இருப்பினும் மக்ரஜ் (ஒலி உருவாகும் இடம்) 17 வகையே. தஜ்வீத் உலெமாக்களிடையே இந்த தொகையைப் பற்றி அபிப்பிராய பேதங்கள் உண்டு. அல் இமாம் ஷாஃபீஈ 16 வகையான மக்ரஜ் உள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றும் பல உலெமாக்கள் 14 வகையான மக்ரஜே உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் இமாம் அல்ஜ்ஜரி{Al Jazari} தன்னுடைய வாதத்தை பல்வேறு துறைகளைச் சார்ந்த உலெமாக்களை (இலக்கணம், கிராஅத், நஹ்வ்…) சந்தித்து அவர்களின் வாத‌ங்களை ஆராய்ந்த பின்னரே 17 வகை என முன் வைக்கிறார்.

இனி வரும் பகுதிகளில் மக்ரஜ்ஜின் அடிப்படைகளைப் பற்றியும், இன்னும் விரிவான மக்ரஜ்ஜையும் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

இறுதி மூச்சு

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ் படைத்த அனைத்துமே ஒரு நாள் மடியும், முடியும். மனிதன் மட்டும் விலக்கல்ல. ஆனால் மனிதனின் மரணம் முடிவல்ல, தொடர்கதையின் அடுத்த பகுதிக்கான நுழைவாயில் அது. மரணத்திற்கு முன் வாழ்ந்த வாழ்வை பரீசீலித்து கூலிகள் வழங்கப் படுவதே அடுத்த பகுதி. நாம் எல்லோரும் அதை உணர்ந்துள்ளோமா, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டுள்ளோமா என்பதே கேள்வி. இங்கு கீழே பதியப்பட்டிருக்கும் பாடலும் அதைப் பற்றியே…

அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –1

அஸ்ஸலாமு அலைக்கும்,

உலகில் எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் குர்ஆனை ஓதித் தரும் மதரஸாக்களும், ஆலிம்களும் பலர் உள்ளனர். எனினும், சரியான உச்சரிப்பை வெகு சில இடங்களிலேயே காண முடிகின்றது. அதிலும் உருதுவை தாய்மொழியாக கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு ஒருவிதமும், தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு வேறு விதமும், இன்னும் மலையாளம் பேசும் ஹஜ்ரத்துமாரின் உச்சரிப்பு மலையாள வாடையிலேயே இருப்பதும் உண்டு. இதனால், சரியான உச்சரிப்பு என்பது கனவாகவே அமைந்து விடுகின்றது.

எனக்கு தெரிந்த ஒரு அண்ணன் சமீபத்தில் கனெக்டிகட் மாகாணத்தில் வேலைக்காக வந்து சேர்ந்தார். சில நாட்களிலேயே அவரின் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டார். அக் குடும்பத்தில் உள்ள கடைசி பெண்குழந்தைக்கு அங்கும் இங்கும் தேடி ஒரு பாகிஸ்தானிய பெண்ணிடம் குர்ஆன் ஒதுவதிற்காக சேர்த்தனர். அக் குழந்தை வீட்டிற்கு வந்த பின் ஓதும் முறையைக் கண்டு அண்ணிக்கு சந்தேகமே வந்து விட்டது, நாம் சரியான இடத்தில்தான் குழந்தையை சேர்த்தோமா என்று. ஏனெனில் இவர்கள் ஓதி வளர்ந்த‌ ஒரு தமிழ் ஹஜ்ரத்திடம். இக் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கும் சகோதரியோ சரியான அரபி உச்சரிப்பை கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளார். அண்ணி என்னிடம் தொலைபேசியில் உரையாடியபோது, இதைப் பற்றி கூறினார்கள். அதன் பின் நான் அவர்களையும் அந்த சகோதரியிடமே சரியான உச்சரிப்பை கற்றுக் கொள்ளுமாறு கூறினேன். இப்பொழுது தாயும் சேயும் சேர்ந்தே கற்றுக் கொள்கின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ். ஆனால், எல்லோருக்கும் இது போன்ற சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. தத்தம் வீடுகளிலேயே அமர்ந்து கொண்டு, வீட்டிற்கு வந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுக்கும் ஹஜ்ரத்துமாரே சாலச் சிறந்தவர் என வாழ்ந்து விடுகின்றோம். நபி (ஸல்) அவர்களின் கூற்றுப் படி, குர் ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு. ஆனால் அவற்றை சரியாக ஓத யாரும் முயற்சிப்பதில்லை.

இன்ஷா அல்லாஹ், இந்த பகுதியில், இனி முதல் சரியான முறையில் குர் ஆன் ஓதிட பாடங்களை காண்போம். வல்ல ரஹ்மான் துணையிருப்பானாயின், இவ் வேலை எளிதானதாகவும், பயனுள்ளதாகவும் அமையும். அதற்கு அல்லாஹ் துணையிருப்பானாக. ஆமீன்.

இதற்கான பாடங்கள் கீழ்க்காணும் வலைகளிலிருந்தும், மற்றும் நான் கற்றுக் கொள்ளும் வகுப்புகளின் பாட புத்தகங்க‌ளிலிருந்தும் தொகுக்கப் படும்.

இந்த பகுதியில், இனி வரும் பாடங்களில் ஏதேனும் தவறு இருந்தாலோ, அல்லது, ஐயம் எழுந்தாலோ தயவு செய்து கீழே கருத்துக்களின் மூலம் தெரிவியுங்கள் / அல்லது எனக்கு இம்முகவரியில் மின்னஞ்சல் எழுதுங்கள்.

இன்ஷா அல்லாஹ், அடுத்த பகுதியில் சந்திப்போம்…

பகுதி இரண்டு

காலம் தாழ்த்தாதீர்கள் சகோதர சகோதரிகளே…

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே,

நம்மில் நிறைய பேருக்கு, அல்லாஹ் நமக்கு தந்துள்ள அருட்கொடைகளைப் பற்றிய நினைவோ, அதற்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை. அதிகம் பேரிடம், இது நம்முடைய கடின உழைப்பால் கிட்டியது என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. சற்றே ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் நினைத்தால் இந்த அருட்கொடைகளை ஒரு நொடியில் நம்மிடமிருந்து அகற்றிட முடியும். அந்நிலை ஏற்பட்டால்?

கீழே பதியப்பட்டிருக்கும் படம் இது போல வாழ்ந்த ஒரு மனிதருடையது. தற்போது பக்கவாதத்தால் முடங்கிப் போயிருக்கும் இவரை பேட்டி கண்டனர். அப்பேட்டி அரபியில் இருப்பதால் , முடிந்த வரை சரியான தமிழாக்கம் செய்திருக்கின்றேன். அரபி தெரிந்தவர்கள், இதில் ஏதேனும் பிழை கண்டால் தெரியப் படுத்தவும். நன்றி.

பேட்டி காண்பவர்: “உண்மையில் இது அல்லாஹ்வின் ஃகதர் தான் என்பதில் நமக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை. அல்லாஹ் தன் திருமறையில் “…நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (அல்குர்ஆன்: 4:19)” என்று கூறுகின்றான். சரி, அப்துல்லாஹ், நீங்கள் கூறுங்கள். உங்கள் வாழ்வில் முன்னமிருந்த மூன்று முக்கிய விடையங்களைப் பற்றி, இப்போது நீங்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின் மீண்டும்
அவைகளைச் செயல்படுத்தும் பாக்கியம் கிட்டாதா என ஏங்கும் மூன்று விடையங்களைப் பற்றி கூறுங்கள்.”

அப்துல்லாஹ்: “மூன்று விடையங்களா? என்னை சார்ந்த மூன்று விடையங்களே எனக்கு நினைவுக்கு வருகின்றது. அவற்றை இப்போது செயல் படுத்த முடியாத நிலையில் இருக்கின்றேனே என்பதே எனக்கு வேதனையளிக்கின்றது.

அவற்றில் முதன்மையானது, மீண்டும் ஒருமுறையாவது அல்லாஹ்விற்கு ‘ஸஜ்தா’ செய்யும் பாக்கியம் கிட்டுவது. மீண்டும் ஒருமுறை, ஒரே முறை அல்லாஹ்விற்கு ஸஜ்தா செய்ய விரும்புகின்றேன். மீண்டு வரவே முடியாத ஒரு ஸஜ்தாவை அல்லாஹ்விற்கு செய்ய விரும்புகின்றேன், இன்ஷா அல்லாஹ். என்னுடைய பயமும் அதனைச் சுற்றியே உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றபடி நான் ஆகிவிட்டேனோ என்று அஞ்சுகின்றேன். [68-42 கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.] இன்று என்னால் ஸஜ்தா செய்ய இயலாத நிலையில் உள்ளேன். ஆனால், நான் நடந்து செல்லும் நிலையில் இருந்த போது நிறைய தொழுகைகளை நான் தவற விட்டிருக்கின்றேன். இப்போது என்னை காண்பவர்கள் என் மீது பரிதாபம் கொள்கின்றார்கள். ஆனால் அவர்களில் ஒருவரும் நான் தொழுகையை தவற விட்டபோது எனக்காக பரிதாபப் படவில்லை.

என்னை வருத்தும் இரண்டாவது விடையம், குர்ஆனின் ஒரு பக்கத்தையாவது புரட்டும் வாய்ப்பு. நல்ல நிலையில் இருக்கும் உங்களைப் போன்ற சகோதரர்களுக்கு இது ஒரு விடையமே இல்லை. ஆனால் எனக்கோ மலையைப் போன்றதொரு பெரிய விடையம்.

மூன்றாவது, மகிழ்ச்சியான ஒரு நேரத்தில், அது ஈதுப் பெருநாளோ அல்லது வேறு சந்தர்ப்பமோ வாய்க்கும்போது, என் வீட்டிற்கு சென்று என் தாயை கட்டி அணைக்க வேண்டும்…” (நீண்ட மௌனம் நிலவுகின்றது…)

“எங்கள் இறைவனே! ‘உங்கள் இறைவனை விசுவாசியுங்கள்’ என்று எங்களை ஈமானினளவில் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியுற்று, நாங்களும் அவ்வாறே ‘ஈமான்’ கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் பாபங்களிலிருந்து எங்களை விடுவித்து (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரிக்கும்படிச் செய்வாயாக!” (குர்ஆன் 3:193)

ஐயமும் தெளிவும்

ஐயம் : ஒளூ செய்யும்போது, ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறை கழுவுதல் சுன்னத்து என்று அறிந்திருந்தும், சில சமயங்களில் மனதிருப்திக்காக, நான்கு அல்லது ஐந்து முறை கழுவும் நிலை ஏற்பட்டு விடுகிறதே, இவ்வாறு செய்வது இஸ்ராஃப்(விரையம்) ஆகுமா? குற்றமா? அதைத் தவிர்க்க வழி என்ன?

பர்ஸானா, கீழக்கரை.

தெளிவு : நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து ஒளூ பற்றிக் கேட்கலானார். அதற்கவர்கள் ஒவ்வொன்றையும் மூம்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர் என்றார்கள்.

அம்ருபின் ஷுஐபு(ரழி), அஹ்மத்.

நமது கவனக்குறைவினால் தான் மூன்றைவிடக் கூடுதலாகச் செய்யும் நிலை ஏற்படுகிறது. உதாரணமாக, முகத்தைக் கழுவுகிறோம் என்றால் முதல்முறையே முகம் அனைத்தையும் நன்கு நனையும்படி செய்து விட வேண்டும். மறுமுறை கழுவும் போது திருப்தி உண்டாகும் அளவு மிகவும் நல்லவிதமாக எல்லா பாகத்திலும் தண்ணீர் படும்படி செய்து கொள்ள வேண்டும். மூன்றாம் முறையாகக் கழுவும்போது, பூரண திருப்தி ஏற்படும் நிலையில் முழுமையாகச் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவுதானே!

ஆகவே, ஓளூ, தொழுகை, நோன்பு போன்ற அனைத்து வணக்கங்களிலும் நமக்கு கட்டுப்பாட்டுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒளூவில் கட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால் தொழுகையிலும் அது ஏற்பட்டுவிடும். தொழுகையிலும் அது ஏற்பட்டு விட்டால் நமது ஏனைய வாழ்க்கையிலும் முழுமையான கட்டுப்பாடு ஏற்பட்டு விடும்.

முதல் பயிற்சியான ஓளூவிலேயே கோளாறு என்றால் அதன் பின்னர் உள்ள எல்லாப் பயிற்சிகளிலும் கோளாறுதான் ஏற்படும். அதன் காரணமாகவே, நபி(ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் ஒளூவின் போது மூன்று முறைகளுக்கு அதிகமாகச் செய்வோர் முறை தவறியவர், எல்லை மீறியவர், அக்கிரமக்காரர் செயல்படும் முஸ்லிம்களாக வாழ வகை செய்துள்ளார்கள்.

மூலம்: அந்நஜாத்

அடிவானத்தில் ஓர் நட்சத்திரம்

புகழ் மாலைகளிலும், பாராட்டுகளிலுமே மூழ்கிக் கிடக்கும் தற்போதைய உலகத்தில், புகழுக்கு மயங்காத, அதன் வசீகரத்தால் கவரப்படாத, தன் அடிப்படைக் கோட்பாடுகளை உறுதிபட கையாளும் ஒரு இளைஞனைக் காணும்பொழுது மனதிற்கு இதமளிக்கின்றது. நாம் பேசுவது, ஹாஷிம் ஆம்லாவைப் பற்றி, கடந்த வருடம் அனைத்து செய்தித்தாள்களிலும் (அவருடைய நாட்டின் கிரிக்கெட் குழுவிற்கு (PROTEAS) தேர்ந்தெடுக்கப் பட்டபோது) அதிகமாக காணப்பட்ட ஒரு பெயர்.

ஒரு செய்தித்தாள் விடாமல் அத்தனை செய்தித்தாள்களிலும் தன் பெயர், முதல் பகுதியில் பகட்டாக வெளிப்பட்ட‌பொழுதும் தன்னடக்கத்தில் அதன் தழும்பைக் கூட அணுக விடாமல் பாதுகாத்தவர். ‘துர்பன்’னின் (Durban) வடக்கே ‘நாடல்’ (Natal) என்னும் ஒரு சிற்றூரில் பிறந்து, தென்னாப்பிரிக்காவின் கொதிக்கும் வெயிலில் விளையாடிப் பழகியவர். “வாட்டும் வெயிலில் வறுவலானதும் உண்டு” என்று கூறி சிரிக்கிறார்.


திறந்த வெளியில் விளையாடும் பொழுது சிறு வேடிக்கை விளையாட்டுகளை விடவும், அக்கறையான விளையாட்டுகளே இவரின் மனதில் இடம் பிடித்தன. மேலும், விளையாட்டுத்துறையில் பரம்பரையாக புகழைத் தங்கவைத்துக் கொண்டிருக்கும் DHS பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபின் இவரின் ஆர்வம் இன்னமும் செழிப்படைந்தது. அதன் பின் விளையாட்டு, ஒரு வேடிக்கையாக இல்லாமல் ஆர்வம் கூடிய பணியாக மாறத் தொடங்கியது. தன் மாகாணக் குழுவான Nashua Dolphins’ற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர், 19 வயதுக்குட்பட்டோரின் குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்றார். இளமை வழியும் 21 வயதில் நாட்டின் முக்கிய குழுவான PROTEAS ‘ற்கு தேர்ந்தெடுக்கப் பட்டபோது அத்தனை நாளிதழ்களாலும் பாராட்டப்பட்டார்.

எனினும் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை. இரண்டே சோதனைப் போட்டிகளில் விளையாடிய பின் அவர் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். இன ரீதியான செயல்பாடு என நாடு முழுதும் கருத்துக்கள் எதிரொலித்தும் பிர‌யோஜனமற்றுப் போயின. தன்னுடைய வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடனும், தன்னுடைய வலிமையான ஈமானுடனும் ஆம்லா சுருக்கமாக பதிலளிக்கிறார்,” நான் நினைத்ததைப் போல என்னால் செயல்பட முடியாமல் போனதில் வருத்தம் உண்டென்றாலும், அந்த விடையத்தில் ‘தக்தீர்’ முக்கியமானது. என் கடினமான முயற்சியால் அவ்விடத்தை கைப்பற்ற முடிந்தாலும், அல்லாஹ்வே எது நன்மை தரும் என்பதை அறிவான். இந்த ஈமானே என்னுடைய வருத்தத்தை விட்டும் என்னை முன்னேறச் செய்தது.”

ஹாஷிம் ஆம்லாவின் இந்த உணர்வுகளே அவரை ஒரு முன்மாதிரியாக ஆக்குகின்றன. மற்றெவரும் இவருடைய இடத்தில் இருந்திருந்தால் தன் புகழை தக்க வைக்க, தன் திறமையைத் தவிர்த்து ஏனைய எல்லா காரணங்களையும் துணைக்கு அழைப்பர். ஆனால் ஹாஷிமோ முன்பை விட இன்னும் அதிகமான ப‌யிற்சியுடனும் தொழுகையுடனும் அல்லாஹ்வின் உதவியை நாடுகின்றார். இன்னும் நல்‍-உலெமாக்களின் நட்பிற்கும் ஹாஷிம் நன்றி கூறுகின்றார். ” இத்தகைய அறிஞர்கள் மற்றும் பெரியோர்களின் துணையே என்னை வலுவாக்குகின்றது” என்கிறார் ஹாஷிம்.

ஹாஷிமைப் பொறுத்தவரை வெற்றி என்பது இஸ்லாமிய வழிமுறைகளிலும் உலக விடையங்களிலும் ஒரு சம நிலையை தக்க வைப்பதிலேயே இருக்கின்றது.

இன்றைய தினத்தில் நிறைய முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்தை ஒரு குற்றமாகவே பாவிக்கின்றனர். ஆனால் ஹாஷிம் அப்படியல்ல. தன்னுடைய குழுவில் உள்ள மற்ற முஸ்லிம் தோழர்களுடனும், தன் சகோதரர்களான அஹ்மது ஆம்லா மற்றும் இம்ரான் கானுடனும் விளையாட்டுத் திடலிலேயே தொழுகிறார். கொளுத்தும் வெயிலில் விளையாடும் பொழுதும் இவர்கள் நோன்பை கை விடுவதில்லை. இதனால் மற்ற முஸ்லிம்களிடமிருந்தும் முஸ்லிமல்லாதோரிடமிருந்தும் நன் மதிப்பை பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் தேசிய குழுவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதும், அந்த குழுவினரால் அணியப்படும் மதுவின் சின்னம் பொருந்திய உடையை அணிய ஹாஷிம் மறுத்தார். “அல்ஹம்துலில்லாஹ், என்னுடைய கோட்பாடுகளை கவனத்தில் கொண்டு அனுமதியளிக்கப் பட்டது”, என்று புன்னகைக்கிறார், ஹாஷிம்.

இத்தகு செயல்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றியும் அதன் வழிமுறைகளைப் பற்றியும் கேள்விகள் எழும்போது, தா’வா செய்ய இதனை செவ்வனே பயன்படுத்திக் கொள்கிறார், ஆம்லா. முக்கியமாக இவரின் குழுத் தோழர்களிடமிருந்தே அதிகமான கேள்விகளை சந்தித்துள்ளார். “இதன் மூலம்”, ஹாஷிம் கூறுகிறார்,” என் குழுவினர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும், நம் வாழ்க்கை முறையைப் பற்றியும் நல்ல தெளிவு ஏற்பட்டுள்ளது.”

இவ்வாறெனில் ஆம்லாவை இஸ்லாத்திற்காகவும், இளைஞர்களுக்காகவும் ஒரு முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாமா என்றால் பணிவுடன் பதில் வருகிறது ஹாஷிமிடமிருந்து,” எனக்கு சிறகுகள் இல்லை. எனவே நான் மலக்கு இல்லை. எனினும் என்னை ஒரு முன்மாதிரியாக மக்கள் பார்க்கின்றனர் என்றால், அல்ஹம்துலில்லாஹ், நான் நன்றி கூறுகின்றேன்”. முக்கியமாக இளம் வயதுடைய விசிறிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் ஹாஷிம் அதிகம் நன்றி கூறுகிறார். “இவர்களில் நான் என்னைப் பார்க்கின்றேன்” என்கிறார் ஹாஷிம், ” ஒரு கட்டத்தில் நினைவுகளில் வைத்துப் பாதுகாத்த கனவுகளை இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் அதிக அளவில் முஸ்லிம் இளைஞர்கள் விளையாட்டுதுறையில் வர விரும்புகின்றேன், அவர்களின் இஸ்லாமிய வழிமுறைகளுக்கு அது இடையூறு செய்யாத வரை. காலம் காலமாக விளையாட்டு ஒரு நம்பகமற்ற துறையாகவே எண்ணப் படுகின்றது. ஆனால், உங்களின் நம்பிக்கை வலுவாக இருந்தால், நீங்கள் வழி தவற மாட்டீர்கள்”.

நாடே இன வெறியில் வீணாகிக் கொண்டிருக்கும்பொழுது, முந்திய சமூகத்தினர்களுக்கு கிடைக்காத இத்தகைய சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர்களை அழைக்கிறார், ஹாஷிம். “ஒரு சக முஸ்லிமை நல்ல நிலையில் காணும்பொழுது இன்னும் மனதிற்கு இதமாயிருக்கிறது” என்று ஹாஷிம் கூறுகையில் அவரின் நற்பண்புகளின் தரம் இன்னும் ஒருபடி உயர்கிறது.

நண்பர்களைப் பற்றியும் குடும்பத்தினரைப் பற்றியும் பேச்சு எழும்பொழுது, ஆம்லா பெற்றோருடன் இணக்கமாக வாழ அறிவுறுத்துகிறார். “என் தாய் தந்தை கூறிய உபதேசங்களை விடவும், அவர்களின் வாழ்க்கை முறைகளைக் கொண்டே நான் நிறைய கற்றிருக்கின்றேன். கூடவே நல்ல நண்பர்களின் நட்பை பெறுவதும் முக்கியம். நம்மை நல்ல‌வர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ மாற்றுவதில் அவர்களின் பங்கு முக்கியமானது” என்கிறார் ஹாஷிம்.

இடைப்பட்ட நேரங்களில் இஸ்லாமிய புத்தகங்களையும், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதிலும் ஈடுபடுகிறார். இன்னும் மற்ற நேரங்களில் மனதில் விளையாட்டு நுணுக்கங்களை அசை போடுவதும், பல்வேறு கோணங்களை சிந்திப்பதும் அவரின் வெற்றிக்கு அடிகோலிடுகிறது. இளைஞர்கள் கடினமான முயற்சி செய்ய வேண்டும், கூடவே தொழுகை மற்றும் து’ஆ என்னும் பொற்சாவிகளைக் கொண்டு வெற்றி காண விழைய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
எதிர்காலத்தில் என்ன செய்ய விழைகிறார் என்றால், ” நான் என் விதியை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டேன் ” என்று பதிலளிக்கிறார். எனினும் அவரின் முயற்சிகளும், திறமையும் அவரை வரலாற்றில் இடம் பெறச் செய்யும். பேட்டி தடம் மாறுகின்றது. எதிர்காலத்தில் திருமணம் செய்யும் எண்ணம் இருப்பினும், அதனைப் பற்றிய முடிவு எதுவும் செய்யவில்லை என்கிறார். உண்மையில் அவரை கணவராக அடையும் பெண் ஆசியுடையவளாகவே இருப்பாள்.

இன்றைய கால கட்டத்தில் தன்னைப் போன்ற விளையாட்டு வீரர்களிடையே தனித்தன்மையுடன் விளங்குகின்றார் ஹாஷிம். அவரின் அத்தனை முயற்சிகளிலும் அல்லாஹ் அவரை ஆசிர்வதிப்பானாக.

ஹாஷிம், ஒரு பயபக்தியுடைய முஸ்லிம். தன் கடும் முயற்சியின் மூலம் விளையாட்டுப் போட்டிகளின் மூலம் மது சாம்ராஜ்யங்களின் விளம்பரத்தை தடை செய்துள்ளார். விளையாட்டு உபகரணங்களிலும் அவற்றை வரவிடாதபடி பார்த்துக் கொள்கிறார். தேசீயக் குழுவினரின் உடைகளில் ‘Castle Lager beer ‘ என்னும் மதுபான நிறுவனத்தின் சின்னங்களை தடை செய்யச் செய்தார். தென்னாப்பிரிக்காவின் விளையாட்டு குழுக்களுக்கு பொறுப்பேற்கும் மிகப் பெரிய நிறுவனமான South African Breweries ‘இன் சின்னம் வரையப்பட்ட உடைகளை அணியாமல் தவிர்க்கவும் அனுமதி பெற்றுள்ளார்.

உலகின் அனைத்தி பகுதிகளிலும் உள்ள நம் முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் ஹாஷின் ஆம்லாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் உள்ளவர்களாக்குவானாக. ஆமீன்.

:courtesy:

இல்மும், இஸ்லாத்தின் மறுமலர்ச்சியும்

“இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண்ணத்தோடு ஒருவன் இல்மைக் கற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டால், சுவனத்தில் அவனுக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரு சிறு அளவிலான வித்தியாசமே தென்படும்.”,

என முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தனர்.

[அறிவிப்பாளர்: இமாம் அல் ஹஸன் அல் பஸரி, நூல்: திர்மிதி, எண்: 249]

சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(3)

“இன்னும் நற்கூலிகள் பெருகிடும் நாளையும், அந்நாளில் காட்சி தரும் எல்லாம் வல்ல, முற்காலமும் அறிந்தவனின் ஈடு இணையற்ற, ஒப்பிட இயலா, அழகிய முகத்தை (நடுப்பகலில் காணக் கிடைக்கும் சூரியனையும், மேகங்கள‌ற்ற இரவினில் வலம் வரும் நிலவைப் பார்ப்பது போலான) காணும் சௌந்தர்யத்தையும் பற்றி கேள்வியுண்டென்றால், கேளுங்கள்,“

அந்நாளில் அழைப்பாளர் அழைப்பார், “ஓ! சுவனவாதிகளே, சாந்தி நிரம்பிய, அளவற்ற கண்ணியத்துக்கு உரியவன் தங்களை காண அழைக்கின்றான், வாருங்கள், அவனைக் காண!!“, எனவே அவர்கள் பதிலுரைப்பார்கள், “நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம்”

அவர்கள் அனைவரும் அக்குரலுக்கு கட்டுப்பட்டவர்களாக, பதிலுரைத்தவர்களாக ஒரு பள்ளத்தாக்கில் நிரம்பிடுவர், பின் எல்லாம் வல்ல அருளாளன், தன் அரியாசனத்தை அங்கே கொண்டு சேர்க்க கட்டளையிடுவான். பின் ஒளி வீசும் ஆலய மேடைகள் வெளிப்படும், முத்துக்களாலும், தங்கத்தாலும், வெள்ளியினாலும், வைரங்களாலும் ஆன மேடைகள் வெளிப்படும். அவர்கள் அதில் அமர்வர். அவர்களில் கீழ் வரிசையில் உள்ளவர்கள், கஸ்தூரியினால் ஆன மேடை விரிப்புக்களில் அமர்வர். மேல் வரிசையில் உள்ளவர்கள் எவ்வகை விரிப்பினில் அமர்ந்திருக்கின்றனர் என்பதை அறிய இலர். அனைவரும் பாதுகாப்பாக, வசதியாக தத்தம் இடங்களில் அமர்ந்த பிறகு அழைப்பாளர் மீண்டும் உரத்துக் கூறுவார், “சொர்க்கவாசிகளே! இன்று எல்லாம் வல்ல நாயனை நீங்கள் காண்பீர்கள், இன்று அல்லாஹ் உங்களுக்கு கூலி தர விரும்புகின்றான்.” உடனே அவர்கள் தமக்குள் பேசிக்கொள்வர், “இன்னும் நம் இறைவன் நமக்கு என்ன கூலி தர விரும்புகின்றான்? ஏற்கனவே நம் முகங்களை ஒளியுள்ளவையாக்கி, நம் தராசுகளை எடை மிகுந்தவையாக்கி, நம்மை சுவனத்தில் நுழையச் செய்து, கொதிக்கும் நெருப்பிலிருந்து நம்மை காப்பாற்றிடவில்லையா?

அவர்கள் இவ்வாறே பேசிக்கொண்டிருக்கும் பொழுது, திடுமென ஓர் ஒளி சுவனத்தைச் சுற்றி ஒளிரும், சுவனம் அவ்வழகிய ஒளியால் நிரம்பிடும். அவர்கள் அனைவரும் யோசனையுடன் தம் தலைகளை உயர்த்துவர்…கவனியுங்கள், எல்லையில்லா அன்பு பாராட்டுபவனும், அளவிலா கண்ணியத்திற்குரியவனுமாகிய சாந்தி மிகுந்த திருப்பெயர்களைக் கொண்ட அவர்களின் இறைவன், அவர்களின் முன், உயர்வான விதத்தில் தோன்றி அவர்களை கௌரவிப்பான். பின் கூறுவான், “சுவனவாதிகளே, உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக‌.

அழகிய இவ்வாழ்த்திற்கு பதிலாய், “அல்லாஹ்வே, நீயே அமைதி, உன்னிடத்திலிருந்தே அமைதி, ஓ! கண்ணியமும் மேன்மையும் கொண்டவனே!! நீயே ஆசி மிகக் கொண்டவன்.!!” என்பதே பதிலாகும். அவர்களின் பதிலிற்கு அவர்களின் இறைவன் புன்னகை பூத்தவனாய் பதிலுரைப்பான்,”ஓ! சுவனவாதிகளே, என்னைக் காணாமலே என் மீது ஈமான் கொண்டு, என் கட்டளையின் படி வாழ்ந்த‌வர்கள் எங்கே? இன்று கூலிகள் பெருகிடும் நாளாகும்!

அதற்கு பதிலாக அவர்கள் அனைவரும் ஒரு சேர பதிலுரைப்பர், “எங்கள் இறைவா! நாங்கள் உன்னைப் பொருந்திக் கொண்டோம். எனவே எங்களை நீ பொருந்திக் கொள்வாயாக”. அதற்கு ரப்புல் ஆலமீன் பதிலுரைப்பான்,” ஓ! சுவனவாதிகளே!, நான் உங்களைப் பொருந்திக் கொண்டு இராவிட்டால், உங்களை சுவனவாதிகளாக்கியிருக்க மாட்டேன். எனவே என்னிடம் என்ன தேவையுள்ளதோ, கேட்பீர்களாக” இதற்கு அவர்கள் அனைவரின் பதிலும் ஒன்றாக இருக்கும்,”யா அல்லாஹ், நாங்கள் கண்டு மகிழ உன் திருமுகத்தை காட்டுவாயாக.” எனவே கருணையும் மேன்மையும் கொண்ட இறைவன் திரைகளை அகற்றி தன் திருமுகத்தைக் காட்டுவான். அவனின் ஒளியால் அவர்கள் கௌரவிக்கப்படுவர். அவனின் ஒளியால் அவர்கள் சுற்றி வளைக்கப்படுவர், அல்லாஹ் நாடியிரா விட்டால் அவனின் நூர் / ஒளி அவர்களை எரித்து சாம்பலாக்கியிருக்கும். எனவே அன்பு கொண்ட இறைவன் அவர்களை பாதுகாத்திடுவான்.

இன்னும் அந்த கூட்டத்தினரில் அல்லாஹ் எல்லோருடனும் தனிமையில் பேசிடுவான். ஒவ்வொருவரிடமும் அல்லாஹ் அவர்களின் வாழிவினில் ஒரு நாளினை நினைவுபடுத்தி, அன்று அவர்கள் செய்த துச்செயலைப் பற்றி, “அன்று இவ்வாறு செய்தாயே நினைவிருக்கிறதா?” என்று கேள்வியெழுப்புவான். கேள்வி கேட்கப்பட்டவனோ, அச்சம் மிகக் கொண்டு,” என் ரப்பே, என்னை மன்னித்திட மாட்டாயா?” என்று கேட்பான். இறைவன் பதிலளிப்பான்,”மன்னித்தேன். நான் மன்னித்திரா விட்டால் இன்று நீ சுவனவாதியாகியிருக்க மாட்டாய்

செவிகளில் தேனாய் பாய்ந்திடும் வார்த்தைகள் நிரம்பிய தருணம், இறைவனின் திருமுகத்தை காணக் கிடைத்திடும் பாக்கியஞ்செய்த கண்கள், என்ன அழகு அத்தருணம்..”

இன்னும் சில முகங்கள் அந்நாளில் பொலிவுற்றிருக்கும். (அவை) தங்களது ரப்பை நோக்கிய வண்ணமிருக்கும். [சூறா அல் கியாமாஹ் : 22, 23]

இப்னுல் கய்யூமின் ” ஹாதி அல் அர்வா இல்லா பிலாத் இல் அர்ஃபாஹ்” என்னும் அழகிய புத்தகத்தில் இருந்து, (பக்கம்‍:193)